Thursday, September 9, 2010

தர்மபுரி

நன்றி: http://www.blog.sanjaigandhi.com/


கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோவையில் இருந்து இரண்டு பேருந்துகள் கிளம்புகின்றன. ஒன்றின் மாணவர்களும் இன்னொன்றில் மாணவிகளும். அவர்கள் அனைவரும் கோவை விவசாயப் பல்கலைகழக மாணவர்கள். கல்விச் சுற்றுலாவுக்கான பயணம். ஆடிப்பாடி அரட்டையடித்து சந்தோஷமாக சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்து தருமபுரி நகரம் வந்தடைகிறார்கள். அங்கிருந்து மாணவர்களின் பேருந்து முன்னதாகவும் மாணவிகள் பேருந்து அதைத் தொடர்ந்தும் பையூருக்கு பயணம் தொடர்கிறது.  அடுத்த நாள் அவர்கள் பல புதிய ஆராய்ச்சிகளை காணப் போகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையை மாற்றியும் அமைக்கலாம். இன்னும் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் கூட வந்து சேர்ந்திருக்கவில்லை. நகரின் மையப்பகுதி..

 அவர்கள் மட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் ஒரு கொலைவெறி கும்பல் அவர்களை மறிக்கிறது. பேருந்தின் அனைத்து பக்கமும் கற்கள் வீசப் படுகின்றன. கல்வீச்சில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மாணவிகள் ஜன்னல் திரைகளை மூடுகிறார்கள். அது தான் அவர்களுக்கு பெரும் ஆபத்து என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பேருந்தை மறிந்த அந்த மிருகங்கள் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றுகின்றன. சில மிருகங்கள் தீயை கொளுத்துகிறார்கள். பேருந்து கொளுந்துவிட்டு எரிகிறது. உள்ளே மாணவிகள் அலறல். ஜன்னல் வழியே தப்பிக்கலாம் என்றால் தொடர்ந்த கல்வீச்சு. பிணம் திண்ணி கழுகுகளின் ஆட்டம் அடங்கவேயில்லை. வெகு விரைவில் பேருந்து முழுதும் தீ பரவிவிட்டது. யாராலும் வெளியேற முடியவிலை.

எதேச்சையாய் அதை கவனித்த மாணவர்கள் தங்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிவருகிறார்கள். இந்த பிணம் திண்ணி நாய்கள் தப்பி ஓடுகின்றன. மாணவர்கள் எரியும் பேருந்தின் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். அதன் வழியே மாணவிகளை வெளியே இழுத்துப் போடுகிறார்கள். அனைவருக்கும் தீக்காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒருபுறம். தீக்காயங்களுடன் வெளியேறி, உள்ளே இருக்கும் உங்கள் உயிர்த்தோழிகளை மாணவர்களுடன் சேர்ந்து மீட்கப் போராடுவது இன்னொருபுறம். ஒருவழியாய் அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என மூச்சுவிட்டுக் கொண்டிருந்த போது திடீர் பரபரப்பு மாணவிகளிடம்.. எங்கே ஹேமலதா? எங்கே காயத்ரி? எங்கே கோகிலவாணி?

வகுப்புக்குப் போகாமல் மரங்களடியில் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். டேய் மச்சான், பாரதிபுரத்த்துகிட்ட யாரோ காலேஜ் பசங்க பஸ்ஸை கொளுத்திட்டாங்களாம்டா.. என்று யாரோ ஒரு மாச்சான் கத்தினான். மற்றவர்களுக்கும் தகவல் சொல்ல சொல்லிவிட்டு அங்கிருந்த சிலர் மட்டும் உடனே ஓடத்துவங்குகிறோம். அப்போது எல்லோருமே பேருந்துகளில் தான் கல்லூரி வருவோம். யாரிடமும் வாகனங்கள் இல்லை. அல்லது இருப்பவரைத் தேடிக் கொண்டிருக்க மன்மோ நேரமோ இல்லை. கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் சற்று கூடுதலான தூரத்தை அடைய ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாய் இருந்தது. எங்கும் மரண ஓலம். முகத்தில் உயிர் பயம். தேவைப் பட்ட உதவிகளை செய்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவனைப் பார்த்தேன். என் பள்ளித் தோழன். டேய் , நீ என்னடா பண்ற இங்க? என்று கேட்டது தான் தாமதம். மச்சான், அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்கக்கூட இருந்து என் ஃப்ரண்ட்ஸ் இப்போ எங்கள விட்டுப் போய்ட்டாங்கடா.. பயணம் செய்த மாணவர்களில் அவனும் ஒருவன். அங்கிருந்தவர்கள் முகத்தில் உயிர் பயத்தை மட்டும் பார்த்த என் நண்பர்களுக்கு உயிர்பலி அப்போது தான் புரிந்தது. அவன் பார்வை சென்ற திசை நோக்கி பீதியுடன் போய் பார்த்தேன். பேருந்தின் பின் நுழைவாயில். கதவு சாத்தி இருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தேன். அது என் வாழ்வில் மறக்கவே முடியாத காட்சியாக இருக்கும் என அந்த நொடி வரை தெரியவில்லை. மூன்று மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் தீக்கு இரையாகிக் கிடந்தார்கள்.

தருமபுரி நகரத்தில் அதிமுகவில் பல அணிகள் இருந்தாலும் பெரும் அணிகள் இரண்டு உண்டு. SR வெற்றிவேல் (இவர் தந்தையை ரவுடி ரங்கன் என்பார்கள் , சமீபத்தில் நடந்த? உட்கட்சித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை தேர்தல் அலுவலகம் முன்பே வெட்டிக் கொன்றதாக கைது செய்யப் பட்டார் வெற்றிவேல் .) தலைமையில் ஒரு அணி. மிஸ்டர் எக்ஸ்( வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.. எனவே பெயர் தேவையில்லை )  தலைமையில் மற்றொரு அணி. வெற்றிவேல் வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. மிஸ்டர் எக்ஸ் ஒதுக்கிவைக்கப் பட்டிருந்தார். மீண்டும் தன் விசுவாசத்தைக் காட்ட சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் துள்ளிக்குதித்த மிஸ்டர் எக்ஸ் தன் அல்லக்கைகளை ஏவி விடுகிறார். அந்தக் கூலிப்படை தன் வெறியாட்டங்களை நிகழ்த்த சிக்கியவர்கள் தான் இந்த அப்பாவி மாணவர்கள்.

குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிலருக்கு ஆயுள் தண்டனையும் சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப் படுகிறது. வழக்கு பேல் முறையீட்டுக்காக சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறது. மூன்று பேரின் மரண தண்டனைகள் உறுதி செய்யப் படுகிறது. மற்றவர்களின் தண்டனைகளில் சில மாற்றங்கள். பின்னர் வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு செல்கிறது. இப்போது உச்ச நீதி மன்றமும் இவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப் படுத்துகிறது.

இந்த மிருகங்களுக்கான இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். அன்று இவர்கள் எங்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்களே கொன்றிருந்தாலும் கொன்றிருப்போம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நல்ல தீர்ப்பு வந்ததே. ஆனால் சாக வேண்டியவர்கள் இந்த மூவர் மட்டுமே இல்லை. இன்னும் சில பிணந்திண்ணிகள் தப்பிவிட்டன.

வழக்கம் போல் மனித உரிமை ஆர்வலர்கள் கூவ ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தெரிந்தவரையில் இவர்கள் பேர் தான் மனித உரிமை ஆர்வலர்கள். உண்மையில் மிருக ஆதரவு விளம்பரப் பிரியர்கள். மரண தண்டனையை எதிர்க்கிறார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சட்டம் தொடர்பானது இல்லை. உயிரைப் பறிக்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லையாம். அதுவும் கொலை தானாம். நல்லா சொல்றாங்க டீட்டெயிலு. சில நண்பர்கள் எழுதி இருப்பது போல், தண்டனை என்பது குற்றவாளியை திருந்த மட்டுமில்லை. அது போன்றக் குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தான். மனிதனுக்கு இருக்கும் உச்சகட்ட பயமே உயிர் பயம் தான். உயிரோடு இருக்கத்தான் எல்லாம் செய்கிறார்கள். தன் செயலால் அந்த உயிரே போய்விடும் என்று தெரிந்தால் தயங்குவார்கள் அல்லவா?. ஆகவே சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். 

இந்த சம்பவத்தில் இறந்த 3 பெண்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறார்கள். ஒருவேளை மற்றவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால்?. இந்த கூலிப்படையின் நோக்கம் இந்த 3 பெண்களை மட்டும் கொல்வதல்ல. ஒட்டு மொத்த மாணவிகளையும் கொல்வது தான். எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். 

இல்ல இல்ல.. என்ன காரணம் சொன்னாலும் மரண தண்டனை தவறு தான் என சொல்பவர்களுக்கு:  

போங்கய்யா நீங்களும் உங்க மசுரப் புடுங்குற மனித உரிமையும்..

No comments:

Post a Comment