Wednesday, August 25, 2010

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

நன்றி: http://truetamilans.blogspot.com/

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் குடும்பத்தில் இருந்து 2 ஆயிரத்து 632 பேர் வந்திருந்திருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் கோல்டன் பாஸ் கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் வீட்டுச் சம்பந்திகள், அவர்களது வீட்டு உறவினர்கள், பேரன், பேத்திகள் என்று அத்தனை பேருக்கும் 90 புரோட்டோகால் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களைத் தங்குமிடத்தில் இருந்து விழா இடத்துக்கு அழைத்து வரும் வேலையைச் செய்தது இந்த கடமை தவறாத தமிழக அரசு அதிகாரிகள்தானாம்..

இது தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கார், ஒரு டிரைவர்ன்னு சூப்பரா ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..

இதெல்லாம் யார் வீட்டுக் காசு..?

தி.மு.க. மாநாட்டு மேடைகளில் அவர்களது விழாக்களில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் முன் வரிசையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்ளும். தமிழுக்காக ஒரு மாநாடு நடத்தப்படும்போதும் அந்த நிலைதான் தொடர வேண்டுமா..?

ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், உள்ளூர்ப் புலவர்கள் பலரும் ஒழுங்கான இடமில்லாமல் திணறித் தவிக்க.. கருணாநிதி குடும்பத்தின் நான்கு தலைமுறை வாரிசுகளும் ஒரு முழு மேடையை கபளீகரம் செய்து கொண்டார்கள்.

மாநாட்டுப் பொது மேடையின் முன் வரிசையில் இருந்த மொத்த நாற்காலிகளும் அவர்களுக்குத்தான்.. அவர்கள் திடீரென அரங்குக்குள் நுழையும்போது 15 வரிசை ஆட்களும் எழுந்து நிற்கிறார்கள். அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசிக் கொண்டிருக்கும்போது செல்வி, துர்கா ஸ்டாலின், காந்தி அழகிரி வருகிறார்கள். முன் வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். ஹார்ட் இதன் அர்த்தம் புரியாமல் விழிக்கிறார்.

தொடக்க விழாவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் ஊர்வலம் பார்க்கும் மேடையை அழகிரியும், தயாநிதி மாறனும் பிடித்துக் கொண்டார்கள். ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில் கனிமொழி மகாராணி போல் வலம் வந்தார். அழகிரி மகள் கயல்விழி கவியரங்கில் இருந்தார். செல்வி மகள் எழிலரசி வீணை வாசித்தார். கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார். இணையதளக் கண்காட்சியைத் திறப்பது தயாநிதி மாறன். இறுதி நாள் மேடையில் ஸ்டாலினுக்கு நாற்காலி இருப்பதை உணர்ந்த அழகிரியும் தானே மேடையேறி ஓர் இடத்தைப் பிடித்தார்.

கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்..

அதே கவிஞர்கள்.. அதே கூட்டம் சூழ்ந்திருக்க நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர்.. யாரங்கே.. தொடங்கட்டும் என்று ஆரம்பமாகிறது கவியரங்கம்..

கிளம்பிற்றுக்கான் தமிழ்ச் சிங்கக் கூட்டம் என்று வைரமுத்துவும், தமிழுக்கும் அமுதென்று பேர் என்று வாலியும் ஆளுக்கொரு சோப்பு கம்பெனியுடன் வந்தார்கள்.

செம்மொழித் தங்கமே எங்கள் செல்வச் சிங்கமே.. உன்னைக் கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி” என்று ஆரம்பித்து பாப்பநாயக்கன்பாளையம் டீக்கடை ஒன்றில் செம்மொழி மாநாடு நோக்கி நிற்கும் ஒரு மூதாட்டியிடம் தான் பேசும் பாவனையில் முதல்வர் மேல் மும்மாரி பொழிந்தார் வைரமுத்து.

கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா..? அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா, “தலைவா நீ சாகா விளக்கு.. விதி விலக்கு.. அகல் விளக்கு.. அகலா விளக்கு.. சென்னைக்குத் தெற்கே உள்ள திருக்குவளையில்தான் தமிழுக்குக் கிழக்கே பிறந்தது” என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

விடுவாரா நா.முத்துக்குமார்? “சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய்.. திரையுலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் கலைஞர் திரை உலகையே ஜெயித்திருக்கிறார். கலைஞர் ஒரு மலைக்கோட்டை” என்று வாசித்தார்.

கயல்விழிக்கான அறிமுகமே அபாரம். “தாத்தா தலையாட்ட.. பாட்டி தாலாட்ட.. அப்பா பாராட்ட.. சித்தப்பா சீராட்ட.. பாட வா பெண்ணே.. உன் தாத்தாவிடம் நீ கேட்ட தமிழ்ப் பாட்டை..” என்று அழைத்தார் வைரமுத்து.

பாட்டு என்று அழைத்ததால் உண்மையில் பாடியேவிட்டார் கவிதாயினி. “பள்ளம் மேடாக வேண்டும். புரையோடிப் போன லஞ்சம் போக வேண்டும்” என்று சொன்னதுதான் யாருக்கு என்று புரியவில்லை..

இதையெல்லாம் கேள்விப்பட்ட வாலி தலைமையிலான அணி 16 அடி பாய்ந்தது. “ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது அக்குவளை திருக்குவளை..” என்று சொன்னவர் மேத்தா. “காற்றே கலைஞரின் புகழ்ப் பாடித் திரி..” என்று இயற்கைக்கு உத்தரவிட்டார் வாலி. “கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்தத் தமிழன். வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசிவரை கலைஞர்..” என்றெல்லாம் புகழ் பாடிப் பொழிந்தவர் இறுதியில் “முத்துக்குமார் தீக்குளித்து வளர்த்த தமிழ்” என்று முடித்தார் பழநிபாரதி.

“82 வயது உடல் மறைத்த இளைஞனே.. கலைஞரில் இருக்கிறார் கடவுள்.. 108 வடிவில் காப்பது கலைஞர்தானே..?” என்று தன் பணியைச் செவ்வனே முடித்தார் பா.விஜய்.

ஹைலைட்டான விஷயம்..

செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ்களை கலைஞர் குடும்பத்து குல தெய்வமான திருக்குவளை பரமேஸ்வரி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழ்களை கொண்டு வந்து கொடுத்த ஆறு பூசாரிகளுக்கும் தனது கையாலே, தலா மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பட்டு வேஷ்டியையும் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. இதைச் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த பூசாரிகள்.

ம்ஹும்.. பகுத்தறிவு வேஷம் போடும் இவரைப் போன்ற வேடதாரிகள் தமிழினத்தின் தலைவராம்..

மொழிக்காக உயிரையே கொடுப்பேன் என்று வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடியைத் திருடி தன்னைத் தானே வாழ்த்திக் கொண்ட அற்பபுத்தியுடைய இந்தத் திருடர்கள் கூட்டம்தான் தமிழகத்தை வாழ வைக்க வந்த தெய்வங்களாம்..

சகித்துக் கொள்ள முடியவில்லை..

No comments:

Post a Comment